Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, September 1, 2011

மனிதநேயம்


மனித சிற்பத்தை வடிக்கும் உளி 
கல்லாய் நின்றவனை கலையாக்கும் கருவி 
அன்பெனும் அமிழ்தை அரவணைப்பு பாத்திரத்திலிட்டு 
கையிலே நீட்டுவதல்ல கனிவோடு ஊட்டுவது 

பொருளை கொடுப்பதல்ல பொருள்பட கொடுப்பது 
கொடுப்பதும் கொள்வதும் குற்றமற்றதாய் இருப்பது 
உயர்வுதாழ்வு காட்டும் மனிததராசின் மனமுள் 
மனிதநேயத்தை நோக்கி என்றும் நிற்பதில்லை 

மனிதமனம் தேடுவது உதவியை மட்டுமல்ல 
உதவும் கரங்களின் பரிவெனும் ஸ்பரிசமும்தான்
உணவை மட்டும் கொடுப்பது மனிதம் 
அருகிருந்து உண்ண செய்வது மனிதநேயம் 

தனித் தூண்களாய் தவித்து நிற்ப்பதைவிட  
மனிதநேயம் எனும் கூரையால் பிணைக்கப்பட்டு 
மண்டபமாய் மணி கோபுரமாய் வாழ்ந்து 
மனிதம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம்!! 

Wednesday, August 31, 2011

அன்னையே!


பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தாய் 
பட்ட வலிகளுக்கு பரிதவிக்கவில்லை நீ 
நானும் சுமக்கிறேன் சேயாய் உன்னை 
மனதிலும் நிஜத்திலும்  வலிகள் தெரிவதில்லை  
நீ இருந்தாய் வலிகளின் மருந்தாய்
அன்னையின் அன்பு ஆண்டவனிடத்தும் வராது
உள்ளத்தே வைத்து உன்னையும் வணங்குகிறேன்

  

Thursday, July 28, 2011

காவிரியை காப்போம்!

தென்னையின் நீரென சிறுஊற்றில் பிறந்தாய்
தமிழன்னையின் சேயென தரணியில் வளர்ந்தாய்
பெண்மையின் அன்பை ஊரெலாம் பொழிந்தாய்
கணவனான கடலில் கவின்மிக கலந்தாய்
இடையில் பல இன்னல்களும் இருந்தன.

பெண்மையின் இருப்பிடமாய் பேருருகொண்ட உன்னை
பேதைகள் பலர் பெருமுயற்சியால் தடுத்தனர்
இவ்வன்னை மடியில் வளரத் தடைபல
அத்தடைகளை கோபம் கொண்டு உடைக்கவில்லை
பெண்மையின் அங்கமே பொறுமை ஆதலலோ ?

உன்னை மீட்க பொறுமையுடன் போரிடுகிறோம்
உன்னால் வளர்ந்ததெங்கள் எண்ணங்கள் ஆதலால்
பொலிவுடைய பொன்னி என்னும் பெண்ணே
எங்களை பேணும் உன்னை வளபடுத்துவோம்  
நீ வளரும் காலம் வெகுஅருகில்.

Sunday, March 6, 2011

மாநகர் எரிந்தது!

புகாரில் புதிதாய் மணம் முடித்து புறத்தவள் ஒருத்தியிடம் புருஷனை கொடுத்து 
புதிராய் நின்றவள் கண்ணகி 

புணர்ந்தால் புதியவளாய் புத்தொளி பெற்றாள்
பழைய கணவனை புதியவனாய் கண்டு
புறநகர் மாமதுரையில் புதுவாழ்வு புனைந்தாள்

தொடக்கமே முடிவாய் போனது 
துயரமே புது உருவ மெடுத்து
விதியெனும் உருபெற்று வார்த்தையில் விளையாடியது

ஓர் எழுத்துபிழை நேர்ந்தது
உயிர் மெய்யை பிரிந்தது
ரணத்தை தந்தது மரணம்

கட்டியழுதாள் கதரிதுடிதாள்
அத்துடன் நின்றாளோ - இல்லை 
பொங்கி எழுந்தாள் புரட்சி பெண்ணாய் 

கோமகனை குற்றம் சாட்டினாள்
உடைத்து உரைத்தாள் உண்மையை 
உணர்ந்தான் உலகை விடுத்தான் உத்தமன் 

நெடுந்துயில் கொண்டான் நெடுஞ்செழியன்
தந்தையின் பாவம் மக்களை வதைத்தது 
மாநகர் எரிந்தது மாமதுரை மண்ணாய்போனது.

  

Monday, February 14, 2011

முதல் கவிதை - வலை பதிப்பில்

இது புதிது, புத்தம் புதிது
நித்தம் எந்தன் நினைவுகள் கொண்டு
இதமாய் செய்த இதய செண்டு

கருத்துகள் நிறைந்த பெட்டகமாய்
கவித்துவம் மிகுந்த கற்பகமாய்
கலந்து புனைந்த ஊடகமாய்

சிந்தனை வித்துக்கள்
சின்னஞ்சிறு முத்துக்கள்
சிற்சில காணுங்கள்

உங்கள்
வாசல்    
வரும்...