Sunday, April 3, 2011

பயணம்

அவன் பயணப்பட்டான். வாழ்க்கை களத்தில் அவன் பயணம் இன்னும் முடியவில்லை. முன்னோக்கி பார்த்தான் அவன். பாதை பிடிபடவில்லை. அவன் பின்னோக்கி திரும்பியதுதான் தாமதம். கொடிய விலங்குகள் அவனை ஆட்கொள்ள வந்துகொண்டிருந்தன.

அந்த கொடிய விலங்குகள் அவனது நினைவுகள்தான்.  பாதையின் பல இடங்களில் சந்தித்து வந்தவைதான்.  என்றாலும் அவன் மனம் துவண்டது.  போராடியபோது ஏற்பட்ட வலியை இப்போதும் உணர்ந்தான் அவன்.  அவை பின்தொடர்வதை அவனால் தடுக்க முடியவில்லை.  அவன் பலமுறை இவ்வாறு பின்னோக்கி பார்த்ததுண்டு.  அவனை பின்தொடர்ந்தவைகளின் எண்ணிக்கை கூடியதே தவிர குறையவில்லை. சில நேரங்களில் பயந்ததுண்டு. ஆனாலும் அவன் தன் பயணத்தை தொடர்ந்தான். 

அவனது இன்பப்பூக்கள் எங்கே என்ற நினைவு அவனுக்கு வந்தது. அவற்றை காண ஆவலாய் திரும்பினான். அதோ தூரத்தில் சில புள்ளிகளாய் அவை அவனுக்கெதிர்திசையில் நகர்ந்துகொண்டிருந்தன.  அவன் கண்களின் ஈரம் அவற்றை வளர்க்குமா? என்ற ஏக்கம் அவனுக்கு வந்தது.  சில மிருகங்களிடமிருந்து காத்து வருடிய பூக்களாயிற்றே அவை.  தன்னை காத்த ஆயுதங்களாய் கண்டான் அவன். சில இடங்களில் துவண்டாலும் பல இடங்களில் காத்து பயணத்தை தொடரச்செய்தது. 

அவனே அவனை கடிந்து கொண்டான். பின்னோக்கியபடி பயணத்தை தொடர்வது தவறு என முன்னோக்கினான்.  பாதை இருள்சூழ்ந்திருந்தது.  இப்போது அவனுக்கு பயமில்லை. பாதை இருளாக இருந்தாலும் சேரவேண்டிய இடம் ஒளிப்பிழம்பாய் தெரிந்தது.  அவனது கால்கள் அந்த ஒளிப்பிழம்பை நிலையாய் கொண்டு நகர்ந்தன. 

அவனது பயணம் தொடர்கிறது.

No comments:

Post a Comment