Wednesday, June 29, 2011

செவ்வந்தி!

செவ் 'அந்தியில்' பூக்கும் செவ்வந்தியே!
இருளில்தான் உனது வாழ்க்கை என்பதை அறிவாயோ?
மாலையில் மலர்ந்து சிரிக்கிறாய்! சிலிர்க்கிறாய்!!
பின்னே புரிந்தது மாலையின் துயரம். 

உடனுறை மலர்களால் உள்ளம் பூத்தாய்,
தோழர்கள் மணத்தால் மாலையில் சேர்ந்தனர் - மாலையில்!
உன்னிலை என்ன? நீ அறிவாய்!
தனிமையில் நீ!  துணையாய் தனிமை!!

முன்காலையில் வந்தவர் முழுவதுமாய் கொய்தார்.
அந்த அற்பமகிழ்ச்சியும் அரைமணி நேரம்தான் அறிவாயோ?
உயர்ந்ததோர் மாலையாய் உனையும் வடித்தார்.
உயர்ந்தது உவகை உந்தன் உள்ளத்தில்!  

நெடுமையாய் கிடந்தவன் தலையை தூக்கி
உற்றதோர் மலையாய் உனையே மாட்டினர் அவ்வுருவத்திற்கு.
கண்ணீரும் பன்னீரும் உந்தன் மேலே
அவை உனதோ? உற்றவர் உடையதோ?

சடுதியில் விழுந்தாய்! புழுதியில் மடிந்தாய்!!
இடுகாடு வழியிலேயே இறுதி முடிவு உனக்கு.
உனது சோகங்கள் அதோடு மடிந்ததோ?
மடிந்த இடத்தில்தான் மறுபடி முளைத்ததோ?

நெடுவழி சென்றவருக்கு வழித் துணையானேன்,
பெருந்துயர் நீங்கி உயர்நிலை அடைந்தேன் உன்னதமாய்!
பெரும்பயன் அளித்ததே பெருமை! பெருமை!!
செருக்குடன் மகிழ்ந்து மடிந்தது செவந்தி!